சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஐநா சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்றைய நாளில் ஏராளமான பொதுமக்களுடன் இணைந்து யோகாசன பயிற்சி மேற்கொள்வதை ஒவ்வொரு வருடமும் பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக யோகாசன நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படவில்லை.
இந்த வருடம் 75வது சுதந்திர ஆண்டும் ஓராண்டுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் அதனையொட்டி யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள முக்கியமான எழுபத்தைந்து இடங்களில் யோகா தினத்தின் போது பல தரப்பு மக்களும் கூட்டாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் நடைபெறும் யோகாசன பயிற்சியில் பிரதமர் மோடி மக்களுடன் இணைந்து யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஜூன் 21 ஆம் தேதியிலிருந்து 25 நாள் முன்பாகவே சர்வதேச யோகா தினத்தில் கவுண்டவுன் தொடங்குகின்றது. அதன்படிவருகின்ற ஜூன் 27ஆம் தேதி ஹைதராபாத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் யோகா நாளன்று பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இணைய வழியில் தொடர் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 70 நாடுகளில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்கி கூட்டு யோகா பயிற்சி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மத்திய மந்திரிகள், திரைப் பிரபலங்கள், யோகாசன நிபுணர்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதன் மூலமாக இந்தியாவின் புகழை சர்வதேச அளவில் மேலும் உயர்த்த முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.