சர்வதேச பயணிகள் விமான சேவை வரும் ஜூலை மாதம் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பயணிகள் விமான சேவை ரத்துக்கான அறிவிப்பு, சர்வதேச சரக்கு விமான போக்குவரத்துக்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், பாதிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 407 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,301 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2.8 லட்சம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில், பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் நேற்று தெரிவித்திருந்தது. எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் இந்த கால கட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும், ஜூலை 1 முதல் ஆகஸ்டு 12 ஆம் தேதி வரையிலான பயணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், விமான சேவைகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.