உலக அளவில் பல நாடுகளில் பணவீக்கமானது நிலவுவதால் வட்டி விகிதமானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதாவது உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெயின் விலை அதிக அளவில் உயர்ந்தது. ஏனெனில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் ரஷ்யா இரண்டாவது பெரிய நாடு. அதன்பிறகு கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையும் அதிகரித்தது.
இதனால் பல நாடுகளில் பணவீக்கமானது ஏற்பட்டதால் வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சமீப காலமாகவே பணவீக்கத்தின் அளவு குறைந்து வருவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி படுத்தும் விதமாக டிசம்பர் மாதம் நடைபெறும் கூட்டத்தின் போது வட்டி விகிதம் உயர்த்தப்படும் வேகமானது குறைக்கப்படும் என அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார்.
அதோடு பணவீக்கத்துக்கு எதிராக நடக்கும் சண்டை இன்னும் முடிவடையவில்லை எனவும் பவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவிலும் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டிசம்பர் 7-ம் தேதி அடுத்த வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதால், ரிசர்வ் வங்கி என்ன முடிவை எடுக்கப் போகிறது என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.