திருவாரூர் மாவட்டத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக ஏ.ஐ.டி.யூ.சி மீனவ தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி மீனவ தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் மீனவர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வளத்தை நம்பியும், கடலை நம்பியும் ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் அதை சார்த்த தொழிலாளர்கள் உள்ளனர். இதனையடுத்து மீன், கருவாடு போன்ற வியாபாரிகளும் உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றினால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு வட்டியில்லாத சிறு தொழில்கடன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைதொடர்ந்து மீனவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி 400 சதுர அடி அளவில் கான்கிரீட் வீடு கட்டித்தர வேண்டும் என்றும், முத்துப்பேட்டை லகூன் தீவை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் போல மீனவர்களுக்கும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் மனு அளித்துள்ளனர். அப்போது தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி மீனவ தொழிலாளர் சங்க மணிலா பொதுச்செயலாளர் சின்னத்தம்பி மற்றும் சங்க நிர்வாகிகள் ரகுமான், சித்ரவள்ளி, நாகூரான், ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்துள்ளனர்.