கோவில்பட்டியில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போதே திடீரென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் மரணம் அடைந்தார்.
தூத்துக்குடி அருகே அமைந்துள்ள கோவில்பட்டியில் கிழக்கு போலீஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இசக்கிமுத்துக்கு சொந்த ஊர் தூத்துக்குடியாகும். இவருக்கு செல்வி (வயது 50) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி பரலோகமாதா ஆலய விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று மூச்சுத் திணறலால் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்த சகபோலீசார் உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்று நேற்று இரவு உயிரிழந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டரான அருண் பாலகோபாலன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்துவின் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர், மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினர்.