இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. வெலிங்டனில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி சூரியகுமார் யாதவின் அதிரடி சதத்தால் 6 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி இந்திய நேரப்படி மதியம் 12: 30 மணிக்கு மெக்லீன் பார்க்கில் நடைபெற உள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மருத்துவ காரணங்களுக்காக விலகி உள்ளார். எனவே அனுபவம் வாய்ந்த மூத்த வீரர் டிம் சவுத்தி நியூசிலாந்து அணியை வழி நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும்.. இத்தொடர் முடிவடைந்த பின், இரு அணிகளுக்குமிடையே 25ஆம் தேதி முதல் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
இந்தியா கணிக்கப்பட்ட லெவன் :
இஷான் கிஷன், ரிஷப் பந்த் (WK), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா (கே ), வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்
நியூசிலாந்து கணிக்கப்பட்ட லெவன் :
ஃபின் ஆலன், டெவோன் கான்வே (வி.கீ ), மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி (கே), ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன்