இந்த முறை கட்டாயம் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக ஆடுவோம் என்று பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆப்கானிஸ்தான், ஹாங்காங் என 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்து தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான்.. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழந்து 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 57 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 78* ரன்களும், பக்கர் ஜமான் 41 பந்துகளில் 53 ரன்களும், குஷ்தில் ஷா 15 பந்துகளில் 5 சிக்ஸர் உட்பட 35* ரன்களும் எடுத்திருந்தனர்..
இதை அடுத்து களமிறங்க ஹாங்காங் அணி நிலைத்து நிற்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 38 ரன்னில் சுருண்டது.. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றான சூப்பர் 4ல் இந்திய அணியை நாளை ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.. அதேபோல மற்றொரு ஆட்டத்தில் இன்று இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன.
இந்தநிலையில் இது குறித்து பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான் பேசியதாவது, சார்ஜா மைதானத்தில் பவர் பிளே பவர்களில் 60 ரன்கள் வரையில் அடிக்க வேண்டும் என்பதை கணக்கு வைத்தே ஆடினோம். அதேபோல ஆடி இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.. அடுத்து இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போகும் போட்டிதான் மிக முக்கியம்.. அந்த போட்டி அனைத்து வீரர்களுக்குமே ஒரு அழுத்தம் நிறைந்த போட்டியாக இருக்கும்.. ஏனென்றால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த போட்டிக்காக காத்துள்ளனர்.
மேலும் நாங்களும் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதை எதிர்பார்த்து ஆவலுடன் இருக்கிறோம். எப்போதுமே உணவு பூர்வமான இந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி நிச்சயமாக ஒரு இறுதிப் போட்டியை போன்று இருக்கும். ஏற்கனவே நடந்து முடிந்த ஆட்டத்தில் நாங்கள் இந்தியாவிடம் தோற்று விட்டோம்.. இந்த முறை கட்டாயம் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாக ஆடுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார்..