இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடக்கத்திலிருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில், அந்த அணி 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 43, கேப்டன் மோமினுல் ஹாக் 37 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி மூன்று, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் மயங்க் அகர்வாலுடன் தொடக்க வீரராகக் களமிறங்கிய ரோஹித் சர்மா ஆறு ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால், இந்திய அணி 7.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்தது.

ரோஹித் சர்மாவை தொடர்ந்து மூன்றாவது வரிசையில் நட்சத்திர வீரர் புஜாரா களமிறங்கினார். புஜாரா – மயங்க் அகர்வால் ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த ஜோடி 59 ரன்கள் சேர்த்த நிலையில், மயங்க் அகர்வால் தந்த கேட்சை, ஸ்லிப் திசையில் நின்ற வங்கதேச வீரர் இம்ருல் கேயஸ் தவறவிட்டார்.
இறுதியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 26 ஓவர்களின் முடிவில் 86 ரன்களை எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 37 ரன்களிலும், புஜாரா 43 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
A solid 72 run-partnership between Mayank (37*) & Pujara (43*) as #TeamIndia close Day 1 on 86/1 after bowling Bangladesh out for 150.
Scorecard – https://t.co/0aAwHDwHed #INDvBAN pic.twitter.com/q2uhSBW5j3
— BCCI (@BCCI) November 14, 2019