2020ஆம் ஆண்டுக்கான இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 தொடர் இந்தோனேஷிய தலைநகர் ஜகார்ட்டாவில் நடைபெற்றுவருகிறது. இதன் முதல் சுற்றில், ஐந்தாம் நிலையில் இருக்கும் இந்தியாவின் பி.வி.சிந்துவை எதிர்த்து ஜப்பானின் ஓஹோரி மோதினார்.
இதில் முதல் செட் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஓஹோரி 14-21 என்ற கணக்கில் கைப்பற்ற, ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்திய சிந்து 21-15 எனக் கைப்பற்ற, மூன்றாவது செட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதில் 21-11 என்ற புள்ளிகளில் மூன்றாவது செட்டைக் கைப்பற்றி இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு சிந்து முன்னேறினார். ஜப்பான் வீராங்கனை ஓஹோரியுடன் மோதிய கடைசி 10 ஆட்டங்களில், 10 போட்டியிலும் சிந்து வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.