அமெரிக்க நாட்டில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை இந்த வருடத்தில் 19% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக இரண்டு வருடங்கள் உலக நாடுகள் கடும் சிக்கலான நிலையை எதிர்கொண்டன. இந்நிலையில் பிற நாடுகளில் பயின்று வரும் பலர், பாதுகாப்பிற்காக தங்களின் தாய் நாட்டிற்கு திரும்பும் நிலை உண்டானது. அதில் இந்தியாவை சேர்ந்த மாணவர்களும் உண்டு.
இது தவிர உக்ரைனில் போர் தொடங்கிய போது, அங்கிருந்த இந்தியா, வங்காளதேசம் போன்ற நாடுகளை சேர்ந்த மாணவர்களை இந்திய அரசாங்கம் மீட்டது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து பயிலும் நிலை இருக்கிறது. அதன்படி அமெரிக்க நாட்டில் பிற நாடுகளை சேர்ந்த மாணவர்கள் 9.14 லட்சம் பேர் உள்ளனர்.
சமீப வருடங்களில் அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் இந்தியாவை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அமெரிக்க நாட்டில் கல்வி கற்கும் மாணவர்களில் சீன நாட்டிற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. ஓபன் டோர்ஸ் என்னும் தகவல் சேகரிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கடந்த வருடத்தில் அமெரிக்காவிற்கு கல்வி பயில சென்ற இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் 1,67,582 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.