கனடா நாட்டிற்கு படிப்பிற்காக சென்ற இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் கொரோனா விதிமுறைகளால் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் கனடா நாட்டிற்கு செல்லும் போது வேறொரு நாட்டின் வழியே சென்று கனடாவை அடைய வேண்டியுள்ளது. இதனால் வழக்கமான செலவை விட சுமார் எட்டு மடங்கு அதிக பணம் செலவாகிறது. மேலும் கனடா செல்வதற்கு முன்பு எந்த நாட்டின் வழியே செல்கிறார்களோ, அங்கு அவர்களை தனிமைப்படுத்த வேண்டியிருக்கிறது.
எனவே இந்திய நாட்டிலிருந்து கனடா பயணிக்கும் மாணவரோ அல்லது மாணவியோ 3.5 லட்சம் ரூபாய் செலவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் மாலத்தீவின் தலைநகரம் மாலேவுக்கு செல்கிறார்கள். அங்கு இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.
அதன்பின் ஐக்கிய அரபு அமீரகம் வழியே தான் கனடா செல்ல வேண்டியுள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாலே செல்லக்கூடிய விமான நிறுவனங்கள் அதிக பணம் சம்பாதித்து வருகிறது. அதாவது இந்நிறுவனங்கள் ரிட்டன் டிக்கெட் வாங்குவதற்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவதற்கும் நிர்பந்தம் செய்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல், மாலேயிலிருந்து ரொரன்ரோ செல்ல 80,000 ரூபாய் தான் முன்பு இருந்தது. ஆனால் தற்போது, அதனை 2 லட்சமாக அதிகரித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய மாணவர்களின் பெற்றோர் பல பிரச்சனைகளுடன் பணப் பிரச்சினைகளையும் சந்திக்கிறார்கள்.