இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இதில் சமீபத்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது . இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி நாளை நாட்டிங்காமில் டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்குகிறது. எனவே நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி ,இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க சென்ற சுப்மன் கில் , வாஷிங்டன் சுந்தர், அவேஷ்கான் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து விலகினர்.இதனால் நாளை நடைபெறவுள்ள போட்டியில் 11 வீரர்களை தேர்வு செய்வதில் கேப்டன் விராட் கோலிக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தின் போது மயங்க் அகர்வாலுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் நாளைய போட்டியில் விளையாட மாட்டார். இதனால் தொடக்க வீரராக கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2007 – ஆம் ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதன் பிறகு விளையாடிய 3 தொடரிலும் தோல்வியடைந்தது .இறுதியாக கடந்த 2018 இங்கிலாந்தில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்து தொடரை கைப்பற்றுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இரு அணிகளும் 126 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் இந்தியா 29 போட்டியிலும், இங்கிலாந்து 48 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது .அதோடு 49 போட்டிகள் டிரா ஆனது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனை சோனி டென் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.