இந்தியா -தென் ஆப்பிரிக்கா தொடர் திட்டமிட்ட படி நடைபெறுமா என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பதில் அளித்துள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதன்பிறகு தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள், 4 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 17-ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் தற்போது ‘ஒமிக்ரான்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்திய அணி தென்ஆப்ரிக்கா சென்று விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .
ஆனால் ஏற்கனவே இந்திய ‘ஏ’ அணி தென்னாபிரிக்காவில் விளையாடி வருகின்றது .இந்நிலையில் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா சென்று விளையாடுமா என்பது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,” தற்போது வரை உள்ள சூழ்நிலையில் சுற்றுப்பயணம் இருக்கிறது .அதோடு முடிவெடுக்க எங்களுக்கு இன்னும் நேரம் உள்ளது .டிசம்பர் 17-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .இது குறித்து நாங்கள் இன்னும் யோசிக்க வேண்டியுள்ளது .அதேசமயம் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு கிரிக்கெட் வாரியம் எப்போதுமே முன்னுரிமை அளிக்கும் .இதற்காக நாங்கள் முடிந்த அனைத்தையும் செய்வோம்.இனி வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்