இந்தியா ராணுவ தலைமை தளபதி ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக எம்.எம் நரவனே பதவியேற்ற பிறகு முதன்முதலாக நேற்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு அவர் ஐந்து நாள் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளார். மேலும் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பாதுகாப்பு பங்களிப்பை மேம்படுத்தி அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்வது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் பிறகு இலங்கையில் உள்ள ராணுவ தலைமையகம், கஜாபா படைப்பிரிவு தலைமையகம், இலங்கை ராணுவ பயிற்சி மையம் ஆகியவற்றை சென்று பார்வையிட இருக்கிறார். குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கையின் கூட்டு ராணுவ பயிற்சியான மித்ர சக்தியின் நிறைவு கட்டத்தையும் நேரில் சந்தித்து காணவுள்ளார். இதனை அடுத்து பதலந்தாவில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று அங்குள்ள வீரர்களின் மத்தியில் உரையாற்றவுள்ளார். இவை அனைத்தையும் முடித்துக் கொண்டு வருகின்ற 16 ஆம் தேதி இலங்கையில் இருந்து இந்தியா திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.