இந்தியா வேடிக்கை பார்க்காமல் சர்வதேச விவகாரங்களில் களமிறங்கி செயல்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயற்சி செய்த சீன வீரர்களால் அப்பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அணிசேரா கொள்கையினை பற்றியும், அமெரிக்க நாட்டிடம் இருந்து தள்ளி இருப்பது பற்றியும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அக்கேள்விகளுக்கு பதில் கூறிய அமைச்சர், அணிசேரா கொள்கையானது குறிப்பிட்ட காலகட்டதுடன் தொடர்பு கொண்டது. மேலும் 1950,60 ஆம் ஆண்டில் சுய சார்புடன் செயல்பட்டு எத்தகைய பிரச்சனைகளிலும் மாட்டிக் கொள்ளாத வகையில் இந்தியா விழிப்புணர்வுடன் உறுதியாக செயல்பட்டது என அமைச்சர் கூறினார். தற்போது உள்ள நிலையானது அவ்வாறு இல்லாத நிலையில் இந்திய நாட்டிடம் பலரும் உதவி நாடுகின்றனர்.
இத்தகைய நிலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது, அதனால் இந்தியா தன்னுடைய பங்களிப்பினை முழுமையாக அளிக்கக்கூடிய கட்டாயமானது தற்போது உள்ளது. அதே சமயத்தில் சர்வதேச விவகாரங்களான போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு போன்றவற்றில் இந்தியா களத்தில் இறங்கி செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் தென்சீனக் கடல் போன்ற சர்வதேச விவகாரங்களில் நட்பு நாடுகளுடன் இந்தியா ஒன்றாக இணைந்து சீனாவிற்கு எதிராக செயல்படும் என கருதப்படுகிறது. இதன் மூலமாக சீனாவிற்கு எச்சரிக்கை அளித்துள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர்.