கேன்ஸ் திரைப்படவிழாவில் மத்திய அமைச்சர், திரைத்துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறியிருக்கிறார்.
நேற்று 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா உற்சாகமாக தொடங்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளிலிருந்து திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில், தமன்னா, தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய் மற்றும் பூஜா ஹெக்டே போன்ற நடிகைகளும், இசையமைப்பாளர்களான ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ரிக்கி கெஜ் போன்றோரும் பங்கேற்றிருக்கிறார்கள்.
மேலும் இதில் பங்கேற்ற மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரான அனுராக் சிங் தாகூர் கூறியதாவது, இந்தியா மற்றும் பிரான்ஸ் தூதரக உறவுகளின் 75 ஆவது வருடத்தை குறிக்கக்கூடிய இந்த நாளில் கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் தடவையாக இந்தியா பெருமைக்குரிய நாடு எனும் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.
இப்போது ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறை இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்கு தகுந்த பங்களிப்பை ஆற்றி வருகின்றன. இந்திய நாட்டில், OTT தளம், வரும் 2023 ஆம் வருடத்தில் 21% முன்னேற்றமடைந்து வருட வருமானம் 12,000 கோடி வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் துறையின் வணிகத்தின் மூலம் நாம் விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் வரும் 2025ம் வருடத்தில் 24 ட்ரில்லியன் வருவாயை ஏற்படுத்தி தரும் என்று கூறப்படுகிறது.