அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மலேரியா முன்முயற்சி குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவரை நியமனம் செய்துள்ளார்.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் மலேரியாவை கட்டுப்படுத்துவத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நோக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஜோ பைடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் பஞ்சாபி என்ற மருத்துவரை மலேரியா முன்முயற்சி குழுவின் உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்துள்ளார். மருத்துவர் ராஜ் பஞ்சாபி லைபீரியாவில் பிறந்தவர் . உள்நாட்டுப் போரின்போது அவரும் அவரது குடும்பத்தினரும் சொந்த நாட்டை விட்டு வெளியேறி 1990ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
அதற்கு பின்பு அவர் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார் . பின்பு ராஜ் பஞ்சாபி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் துறையில் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அதனை தொடர்ந்து அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உதவி பேராசிரியராக பணியாற்றினார். பின்னர் பிரிகாம் என்ற மகளிர் மருத்துவமனையின் இணை மருத்துவராகவும்,” Lost My Health” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும்,இணை நிறுவனராகவும் தனது பணியைத் தொடர்ந்தார்.
இதுகுறித்து ராஜ் பஞ்சாபி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் “அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மலேரியா முன் முயற்சியை வழிநடத்த உலகளாவிய ஒருங்கிணைப்பாளராக என்னை நியமித்துள்ளார். இதனை நான் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பை பெற்றதற்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.