அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய வம்சாவளியினரை பாராட்டி பெருமையாக பேசியுள்ளார்.
நாசாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு சமீபத்தில் பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் ஆய்வு செய்வதற்காக நடத்தப்பட்டது. தற்போது அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக களமிறங்கியதாக செய்தி வெளியானது. இந்த சாதனையானது நாசாவின் மிக முக்கிய சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் என்பவர் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் குழுவின் தலைவராக செயல்பட்டவர். இந்நிலையில் நாசாவின் இந்த சாதனையை பாராட்டி ஜோ பைடன் காணொளியில் பேசினார்.
அப்போது அவர், ” நாசாவின் இந்த சாதனை மிகப்பெரிய விஷயம். இந்த வெற்றி அமெரிக்கர்களின் முயற்சியையும் உழைப்பையும் காட்டுகிறது” என்றார். மேலும் இந்த காணொளியில் இந்திய வம்சாவளியினரை குறித்து மிகவும் பெருமையாக பேசினார். அதில்,” இந்திய- அமெரிக்கர்கள் நாட்டை மிகவும் சிறப்பான முறையில் வழிநடத்துகின்றனர். அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், எனது எழுத்தாளர் வினய் ரெட்டி, ஸ்வாதி மோகன் உட்பட அனைவருமே பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றீர்கள்” என்று பெருமையுடன் கூறினார்.
இதனிடையே ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவி ஏற்று 50 நாட்கள் ஆகிறது. இதுவரை 55 இந்திய வம்சாவளியினருக்கு உயர்பதவி அளித்திருக்கிறார். இந்த 55 பேரில் பாதி பேர் பெண்கள் தான். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெள்ளை மாளிகையில் தான் உயர் பதவியில் இருக்கின்றனர். இந்திய வம்சாவளியினர் நிர்வாகத்தை வழி நடத்துவதில் தங்களது வெற்றியை நிலைநாட்டி வருகின்றனர்.