இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.
ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமனில் இருந்தது. இந்நிலையில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவான் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து ருதுராஜ் கெய்க்வாட் 14 ரன்னில் வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இதனால் இந்திய அணி 36 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியாக இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும் ,தசுன் ஷனகா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன்பிறகு 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரரான அவிஷ்கா பெர்னாண்டோ 12 ரன்களும் , பானுகா 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.