இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்டில் 2-வது இன்னிங்ஸில் ஷமி – பும்ரா ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 298 ரன்கள் குவித்துள்ளது .
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களான கே.எல். ராகுல் 5 ரன்னும், ரோகித் சர்மா 21 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.அடுத்ததாக கேப்டன் விராட் கோலி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .இதனால் 55 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு புஜாரா – ரஹானே ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது .இதில் ரஹானே 61 ரன்களும் , புஜாரா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இருவரின் ஜோடி 4-வது விக்கெட்டுக்குள் 100 ரன்களை எடுத்தது. இதனால் நேற்றைய 4-வது ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் ரிஷப் பண்ட் 22 ரன்னில் ஆட்டமிழக்க , இஷாந்த் சர்மா 16 ரன்களிலும் ஆட்டமிழந்தார் . இதனால் இங்கிலாந்துக்கு 200 ரன்கள் கூட இலக்காக நிர்ணயிக்க முடியாத இக்கட்டான நிலையில் இந்திய அணி இருந்தது.
இதில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த போது இந்திய அணி 167 ரன்களே முன்னிலையில் இருந்தது. இதன் பிறகு 9-வது விக்கெட்டுக்கு முகமது ஷமியுடன், பும்ரா ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். இருவரும் இணைந்து இங்கிலாந்தின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவிக்கத் தொடங்கினர். இதில் சிறப்பாக விளையாடிய முகமது ஷமி 57 பந்துகளில் 5 பவுண்டரி ,ஒரு சிக்சர் அடித்து விளாசி அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். இறுதியாக இந்தியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்துள்ளது. இதில் முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து இறுதிவரை அட்டமிழக்காமல் இருந்தனர்.