இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 40.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 78 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது. இதையடுத்து இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் 8 ரன்னில் ஆட்டமிழக்க ,அடுத்து புஜாரா ரோஹிதுடன் ஜோடி சேர்ந்தார் .இருவரின் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ரோஹித் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ,அடுத்து கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டார். இதனால் 3-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. இதில் புஜாரா 91 ரன்னும் , விராட் கோலி 45 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். இதையடுத்து இன்று தொடங்கிய 4-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பவுலர்கள் புதிய பந்தை பயன்படுத்தினர். ஆடுகளம் சற்று ஈரமாக இருந்ததால் ஸ்விங்க்கு சாதகமாக இருந்தது .இதனால் பந்துகளை சரியாக எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர்.
இதில் 91 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் களமிறங்கிய ஜடேஜா 24 பந்துகளில் 1 சிக்ஸர் ,5 பவுண்டரிகளை அடித்து விளாசி 30 ரன்கள் குவித்தார். இறுதியாக இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்து தோல்வியை சந்தித்தது. இதனால் 76 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது.