இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது .
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சில் தொடங்கிய இங்கிலாந்து அணி 391 ரன்கள் குவித்தது. இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் தொடக்கத்தில் 55 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறியது. இதன்பிறகு களமிறங்கிய புஜாரா-ரஹானே ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். புஜாரா 45 ரன்னும் , ரஹானே 61 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து கடைசி 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷமி-பும்ரா ஜோடி அதிரடியாக விளையாடினர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். இதில் முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் இந்திய அணி 298 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 272 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது. ஆனால் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி தடுமாறியது. இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதில் தொடக்கக் வீரர்கள் ரன் எடுக்காமல் ஆட்டமிழக்க ,அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் கேப்டன் ஜோ ரூட் 33 ரன்னும் ,ஜோஸ் பட்லர் 25 ரன்னும் எடுத்து ஓரளவு தாக்கு பிடித்தனர். இறுதியாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் குவித்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டும் ,பும்ரா 3 விக்கெட்டும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும் மற்றும் ஷமி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது.