இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25.19% ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1718 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7,797 லிருந்து 8,325 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீட்பு விகிதம் இப்போது 25.19% ஆக அதிகரித்துள்ளது.
இது ஒரு நல்ல அறிகுறியாக காணப்படுகிறது எனக் கூறினார். இந்த விகிதம் கடந்த 14 நாட்களுக்கு முன்பாக 13.06% ஆக இருந்தது. அதேபோல, இந்தியா முழுவதும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறப்பு விகிதம் 3.2% ஆக உள்ளது. மேலும் இணை நோயுற்ற இறப்புகள் மொத்த விகிதம் 78% ஆக உள்ளது என கூறியுள்ளார்.
இதுதவிர நாட்டில் கொரோனா பாதிப்பின் இரட்டிப்பு விகிதம் 11 நாட்களாக அதிகரித்துள்ளது. சோதனை மற்றும் சிகிச்சை நெறிமுறையைப் பொருத்தவரை, மருத்துவமனைகளில் ஆர்டி பி.சி.ஆர் சோதனையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என்று லாவ் அகர்வால் கூறியுள்ளார்.