வருமான வரியைத் தாக்கல்செய்வதற்கான கால அவகாசம் மற்றும், ஆதார்-பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக, நாட்டு மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாலும் வருமான வரி, ஜிஎஸ்டி, மின் கட்டணம், வாகன வரி மற்றும் இதர வரிகளைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்திருந்தது.
அதன்படி, “2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல்செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.
அதேபோன்று, 2019-20 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல்செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், உங்கள் வருமான வரி கணக்கோடு நிரந்தர கணக்கு எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான காலக்கெடு 2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.