நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை செய்ததில் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி நகர சங்கம்( டி.யு.சி.எஸ் ) மிகவும் பழமை வாய்ந்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் விற்பனை, பெட்ரோல் டீசல் விற்பனை, ரேஷன் கடைகள், உணவகங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்கள் போன்றவை நடத்தப்படுகின்றது. இந்நிலையில் டி.யு.சி.எஸ் மூலம் நடத்தப்படும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது. இதனை அடுத்து ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அதாவது சேப்பாக்கம் எல்.பி.ஜி கேஸ் விற்பனை மையம், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் அலுவலகம், தாம்பரம், பெரியார் நகர் கிளை வணிக நிறுவனங்களில் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது, கேஸ் விற்பனை மையத்தில் பணிபுரியும் உதவி விற்பனையாளர் சரவணனிடமிருந்து ரூபாய் 1 லட்சத்து 59 ஆயிரத்து 865 கணக்கில் வராத பணம் இருப்பதை கண்டுபிடித்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். இதேபோல் தாம்பரம் பெரியார் நகரில் இருந்து கணக்கில் வராத 54 ஆயிரத்து 370 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் டி.சி.எஸ் விற்பனை மையங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதோடு, மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 235 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.