கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய சென்னை உயநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது செல்லும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்தும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்:
கடந்த 2015-16-ம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 6.38 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவிட்டார். சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கை, எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து ஸ்ரீநிதி மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த மனு தொடர்பாக பதிலளிக்க பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பல மாதங்கள் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது செல்லும் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.