அமெரிக்காவில் பெண் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி கடும் குளிரில் நொறுங்கிய காருக்குள் 5 நாட்கள் உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசித்து வரும் செவிலியரான McFarland ( வயது 68 ) நவம்பர் 18-ஆம் தேதி அன்று உறவினர் ஒருவரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வாகனம் திடீரென பனிப்பொழிவில் சிக்கி எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர சம்பவத்தால் அவருடைய முழங்கால் மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் சம்பவத்தின் போது அவருடைய செல்போன் அருகில் இருந்தும் அவரால் பயன்படுத்த முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த செவிலியருடைய மகள் தனது தாயை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினரும், அவருடைய மகளும் McFarland-ஐ தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஆனால் அவர் மரங்கள் நிறைந்த அடர்ந்த பகுதியில் சிக்கி இருந்ததால் காவல்துறையினரால் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் அந்த செவிலியர் ஐந்து நாட்கள் மழை நீரை மட்டுமே அருந்தி கடும் குளிரில் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்துள்ளார். பிறகு 5-ஆவது நாள் அதிகாரிகள் சிலரால் விபத்தில் சிக்கி இருந்த அந்த செவிலியரின் கார் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறிதும் தாமதிக்காமல் அதிகாரிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு மூன்று அறுவை சிகிச்சை மற்றும் சில வாரங்கள் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்த அந்த பெண்மணி கிறிஸ்துமஸ் அன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து அந்த செவிலியர் தனக்கு நேர்ந்த விபத்து மற்றும் ஐந்து நாள் அனுபவித்த துயரம் குறித்து சமூக ஊடகம் வாயிலாக அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.