சென்னை கோயம்பேட்டில் உள்ள 850 பழக்கடைகளை மே 1ம் தேதி முதல் மூடப்படுவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகள் விடுமுறை அறிவித்த நிலையில், தற்போது பழக்கடை வியாபாரிகளும் கடைகளை மூடுவதாக தெரிவித்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர். கோயம்பேடு சந்தை இடமாற்றம் தொடர்பாக நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில், சந்தையில் மொத்தம் இருக்கக்கூடிய 1,900 மொத்த விற்பனை கடைகளில் 600 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு உரிமையாளர் தரப்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஆனால், சில்லறை வியாபாரம் நடத்தும் 450 கடைகளை அமைந்தகரையில் இடத்தில் வைத்து இயக்கப்படலாம் என ஆலோசனை வழங்கியது. இதற்கு சிறு வையாபாரிகள் ஒப்புக்கொள்ள மறுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, ” கிட்டத்தட்ட 500 சில்லறை வியாபாரிகள் உள்ளனர்.
எனவே, நாங்கள் யாரும் கோயம்பேடு பகுதியை விட்டு வெளியே செல்ல முடியாது. முதன்மை வியாபாரிகளுக்கு கொடுத்துள்ள முன்னுரிமையை எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து அடுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வரை சுமார் 1,500 கடைகளுக்கும் மே 3ம் தேதி வரை விடுமுறை’ வழங்கப்படுவதாக கூறியுள்ளார். இதனால் சில்லறை வியாபாரம் பெரும் அளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மொத்த வியாபாரத்தை பொறுத்தவரை மூட்டைகளாக வியாபாரம் நடைபெறும்.
சில்லறை வியாபாரிகளிடம் தான் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் கிலோ கணக்கில் பொருட்களை வாங்கிச் செல்வர். தற்போது விடுமுறை விடப்பட்டதால் மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பாதிப்படையும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வருகிற மே 1ம் தேதியில் இருந்து பழக்கடைகளை மூடுவதாக பழவியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், காய்கள், பழங்கள் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.