நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின்போது, இளம் வீரர் சிவம் தூபே வீசிய 10ஆவது ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையைப் படைத்தார்.
நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து, 163 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி ஒன்பது ஓவர்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை எடுத்திருந்தது. அதன்பின் 10ஆவது ஓவரை வீசுவதற்காக இளம் வீரர் சிவம் தூபே அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட டிம் செஃபெர்ட் சிக்சருக்கு விளாச, இரண்டாவது பந்திலும் சிக்சர் விளாசினார்.
தொடர்ந்து மூன்றாவது பந்தில் பவுண்டரி விளாச நான்காவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. பின் ராஸ் டெய்லர் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். ஐந்தாவது பந்தை நோ – பாலாக வீச அந்த பந்து பவுண்டரிக்குச் சென்றது. தொடர்ந்து ஃப்ரீ ஹிட் கொடுக்கப்பட, அந்தப் பந்து சிக்சருக்குச் சென்றது. பின்னர் கடைசிப் பந்தையும் சிக்சருக்கு விளாச, அந்த ஓவரில் 34 ரன்கள் எடுக்கப்பட்டன.
இந்தப் போட்டிக்கு முன்னதாக டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் மித வேகப்பந்துவீச்சாளர் ஸ்ட்டூவர்ட் பின்னி 32 ரன்களுடனும், சுரேஷ் ரெய்னா 26 ரன்களுடனும் அடுத்தடுத்த நிலையில் இருந்தனர். தற்போது ஒரே ஓவரில் 34 ரன்களை எதிரணி வீரர்களுக்கு வாரிக் கொடுத்துள்ளதால் அதிக ரன்கள் கொடுத்த இந்தியாவின் சிவம் தூபே முதலிடம் பிடித்து மோசமான சாதனையைப் படைத்துள்ளார். ஒரே ஓவரில் 34 ரன்கள் கொடுத்துள்ளதால் நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகின்றனர். இப்போட்டியில் இந்திய அணி 07 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஒயிட்வாஷ் (5-0) செய்தது குறிப்பிடத்தக்கது.
New Zealand in the last two overs 🤯
6, 6, 4, 1, 4nb, 6, 6, 1, 0, 1, 6, 1, 0#NZvIND pic.twitter.com/V5HYmGC7E4
— ICC (@ICC) February 2, 2020