திமுகவுக்கு இருக்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்,திமுக இத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் எந்த காலத்திலேயும் அஞ்சியது கிடையாது. 1976 ஆம் ஆண்டைவிட அதற்கு வேறு உதாரணம் நான் சொல்லனுமா. ஆட்சியா? கொள்கையா? என்ற பிரச்சனை வந்தப்போ பதவி பரிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று கொள்கையை காத்து நின்றவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள்.
அவசரநிலை அறிவிக்கப்பட்டதுமே மறுநாளே கூட்டத்தைக் கூட்டி இது ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கக்கூடிய செயல் என்று சொல்லக்கூடிய துணிச்சல் நம்முடைய முதலமைச்சராக இருந்த கலைஞர்க்கு இருந்துச்சு. அதே போன்ற சூழ்நிலைதான் 1991 ஆம் ஆண்டு ஏற்பட்டுச்சு. என்னவென்று உங்களுக்கு தெரியும் இலங்கை தமிழருக்கு ஆதரவாக கலைஞர் இருந்தார். விடுதலைப் புலிகளை ஆதரித்தார். அப்படி என்று காரணம் காட்டி 1991 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் உடைய ஆட்சி கலைக்கப்பட்டது.
1989 – 90 காலகட்டத்தில் ஈழம்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகளில் நம்முடைய முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் ஈடுபட்டார். விடுதலைப்புலிகளின் அமைப்பின் தலைவராக இருந்த பால சிங்கம் அவர்களும், யோகி அவர்களும் பலமுறை முதலமைச்சர் கலைஞரை சந்திக்க கோபாலபுரம் வீட்டிற்கு வந்தவர்கள். அன்றைய தினம் ஈழத்திலே ஏதாவது போராளி அமைப்புகள் இருந்தன. பிளாட், இராஸ், ஈபிஆர்எல்எப் இப்படி எத்தனையோ அமைப்பு இருந்துச்சு. அனைத்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் தனித்தனியா நம்முடைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களை வந்து சந்தித்தார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் கோரிக்கைகளை மற்ற அமைப்புகளிடமும், மற்ற அமைப்பினரின் கோரிக்கையை விடுதலைப்புலிகள் இடமும் சொல்லி ஒரு ஒற்றுமை உருவாக்குவதற்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு ஈடுபட்டார்கள், பாடுபட்டார்கள். இந்த தகவல்களை அன்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கும் அடுத்த பிரதமராக இருந்த விபி சிங்குக்கும் எடுத்துச்சொல்லி அமைதியை ஏற்படுத்த பல்வேறு முயற்சி எடுத்தார்கள். ஆனால் திடீரென்று விபி சிங் உடைய ஆட்சி கலைக்கப்பட்டதும் நிலைமை மாறிச்சு. சந்திரசேகர் அவர்கள் பிரதமராக வந்தார்கள். சந்திரசேகர் மூலமாக ஆட்சிக்கு மிரட்டல் விடப்பட்டது.
ஆட்சி கலைப்புக்கு நெருக்கடி கொடுத்தார்கள். அதற்கு யார் காரணமாக இருந்தது இங்கு இருந்த ஜெயலலிதா. எனவே அன்றைய பிரதமர் சந்திரசேகர், திமுக ஆட்சியை கலைத்தார். சந்திரசேகர் தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள என்னுடைய நாற்காலியை பரித்து உள்ளார். அவருக்கு உதவியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அறிக்கை விடும் துணிச்சல் நம்முடைய கலைஞருக்கு இருந்துச்சு. இதையெல்லாம் நான் இங்கு குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம் இந்தத் துணிச்சலில், தைரியத்தில் ஒரு சதவீதம் கூட இல்லாத எடப்பாடி கூட்டத்திடம் இன்றைக்கு தமிழக ஆட்சி சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது. தமிழக கோட்டையை எவ்வளவு சீக்கிரம் கைபற்றுகிறோமா அந்த அளவுக்கு மீதம் இருக்கக்கூடிய உரிமைகளாவது நாம் காப்பாற்ற முடியும்.