கேரளாவின் வயநாட்டில் 10 வயது மாணவி பாம்பு கடித்து உயரிழந்த சம்பவத்தில், மாவட்ட நீதிபதி அந்த பள்ளியின் சுகாதரத்தன்மை குறித்து ஆய்வு செய்தார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் அரசுப்பள்ளியில் ஷஹாலா (10) என்னும் மாணவி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்த புதன்கிழமையன்று 20ஆம் தேதி பள்ளி வகுப்பறையில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மாணவியின் கால் அங்கிருந்த ஓட்டைக்குள் சிக்கிக்கொண்டது, பதறிப்போன அவர் காலை எடுக்க முயற்சிக்கும் போது, அதிலிருந்த பாம்பு ஒன்று காலை கடித்துள்ளது.பயத்தினால் அலறிய மாணவி வலியால் துடித்துள்ளார்.
இதனைப் பார்த்த வகுப்பு ஆசிரியர் அவர் காலை கழுவி ஒரு துணியைக் கொண்டுக் கட்டியுள்ளார். தகவலறிந்து பள்ளிக்கு வந்த மாணவியின் தந்தை அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவனையில் அனுமதித்தார். இதனிடையே, மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் பள்ளி வளாகத்திலேயே வைத்திருந்ததைக் கண்டித்து, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அவர் உறவினர்கள் ஆசிரியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பள்ளிக்குச் சொந்தமான பொருட்களை அடித்து நொறுக்கினர்.
மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் நிலமை மிகவும் மோசமடைந்ததால் அவர் அங்கிருந்து கோழிக்கோடில் உள்ள தனியார் மருத்துவனைக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்ததாக அவரை சோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர் அமைப்புகள், மாணவியின் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பள்ளி முதல்வர், துணை முதல்வர், வகுப்பு ஆசிரியர், தாமதமாக சிகிச்சையளித்த மருத்துவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கேரள உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிபதி அந்த பள்ளியில் ஆய்வு செய்துஅறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வயநாடு மாவட்ட நீதிபதி பள்ளியின் சுகாதரத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த விவகாரத்தில், மாணவியின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஆசிரியர்களின் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.