தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் பரப்புரை தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று மேற்கொண்டார். இதற்காக தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே அதிமுக சார்பில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கரும்பு, வாழைத்தார், இளநீர் கொண்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்துள்ளது.
பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பேசியுள்ளார். இருப்பினும் அங்குக் கூடியிருந்த மக்கள் எப்போது கூட்டம் முடியும் என்றபடி நின்று கொண்டிருந்துள்ளனர். இதையடுத்து கூட்டம் முடிந்தவுடன் அங்கு அலங்கரிக்கப் பயன்படுத்தப்பட்டிருந்த கரும்பு, இளநீர் மற்றும் வாழை மரங்களை போட்டிப் போட்டுக்கொண்டு பிடுங்கியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. வெற்றி நடை போடும் தமிழகமே என விளம்பரம் வந்து கொண்டிருக்கும் நிலையில், மாநிலத்தில் மக்கள் உண்மையில் எப்படியொரு பஞ்சத்திலிருந்தால் இதுபோன்ற காட்சிகள் அரங்கேறும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.