சாமராஜ்நகர் மாவட்டத்தில் ஒரே நாளில் நடைபெறுவதாக இருந்த 7 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் இண்டிகனட்டா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தங்களுடைய 15 வயது சிறுமிக்கு இன்று காலை திருமணம் செய்துவைப்பதாக இருந்த நிலையில், சிறுமியின் பெற்றோருக்கு அரசாங்க விதிமுறைகளை எடுத்துச் சொல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர்.
அதேபோல அரகலவாடி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியின் திருமணம், ஒய்.கே.மோல் கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியின் திருமணம், அமச்சவாடி மற்றும் ஷெட்டிஹள்ளி கிராமங்களில் நடைபெறுவதாக இருந்த குழந்தைத் திருமணங்களும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டன.
இத்துறை அலுவலர்கள் குழந்தைகள் உதவி எண் சேவையுடன் இணைந்து, இம்மாதத்தில் (ஜூன்) மட்டும் மொத்தம் 20 குழந்தைத் திருமணங்களையும், போன மே மாதத்தில் 18 திருமணங்களையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதுதவிர, இம்மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும், 3 குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. ஆனால், இன்று திருமணம் செய்ய முயன்ற 7 சிறுமிகளின் பெற்றோர் மீதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் புகாரளிப்பதற்கு பதிலாக, திருமணச் சட்டம், விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான போக்கைக் கடைப்பிடித்துள்ளனர்.