புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மளிகை கடைக அனைத்தும் இனி வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறியுள்ளார்.
அவ்வாறு, உத்தரவை மீறும் மளிகைகடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி உள்ளிட்ட 3 நாட்கள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மளிகை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனவின் தாக்கம் முதல் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு நகர்ந்த காரணத்தால் கடந்த 27ம் தேதி அத்தியாவசிய கடைகள் திறக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது.
அதில், பெட்ரோல் பங்குகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதி நிறைவடையுள்ளது. இந்த நிலையில், கொரோனா தாக்கம் அதிகம் உள்ளதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று பிரதமருடன் அனைத்து மாநில முதல்வர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கடைகளை திறக்க அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டையில் மளிகை கடைகள் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே திறக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, விழுப்புரம் மாவட்டத்திலும் வாரம் ஒரு முறை மட்டுமே மளிகைப்பொருட்களை வாங்க மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சியின் 42 வார்டுகளில் வாரம் ஒரு முறை மட்டுமே மக்கள் பொருட்களை வாங்க அனுமதி என்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை 6 பிரிவுகளாக பிரித்து பொருட்களை வாங்க அனுமதிக்கப்படுவர் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.