பெரம்பலூரில் பெற்றோரை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் அருகே இருக்கும் தேவேந்திரகுல தெருவில் வசித்து வருபவர்கள் தான் ராமசாமி – செல்லம்மாள் தம்பதியினர். இந்த தம்பதியருக்கு ரமேஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார். ரமேஷ் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததன் காரணமாக அவரது மனைவி தங்கமணி பிரிந்து தனது குழந்தைகளோடு தனியாக வசித்துவருகின்றார்.
இதனிடையே தங்கமணி தினமும் தவறாமல் தனது மாமனார் மற்றும் மாமியாரை பார்த்து விட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், தங்கமணி இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது மாமனாரும், மாமியாரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. அதன்பின் அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்..
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போனவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்தத் கொலையை செய்தது மனநலம் பாதிக்கப்பட்ட ரமேஷ் தான் என்பது உறுதியானது.. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.