பாகிஸ்தானில் கன்டெய்னரை திறக்கும் போது விஷ வாயு தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருக்கும் கேமாரி துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் இரவு சரக்குக் கப்பல் ஒன்று வந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட காய்கறிகள் நிரம்பிய கன்டெய்னரை ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அதை தொடர்ந்து அந்த கன்டெய்னர் அருகில் இருக்கும் ஒரு சந்தைக்கு எடுத்து கொண்டு செல்லப்பட்டது. சந்தைக்கு வந்ததும், அங்கே காய்கறிகளை தனி தனியாக தரம் பிரித்து கடைகளுக்கு அனுப்புவதற்காக ஊழியர்கள் கன்டெய்னரை திறந்தனர்.
அப்போது திடீரென கன்டெய்னரில் இருந்து விஷவாயு வெளியேறி தாக்கியதில் சுமார் 30 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி சுருண்டு விழுந்தனர். இதில் அவர்கள் சுயநினைவை இழந்த நிலையில் உடனே மீட்கப்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.