மும்பையில் சிகரெட் திருடிய வழக்கில் கைதான ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், நீதிபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை பங்கூர் பகுதியில் ஏப்ரல் 21ஆம் தேதி பூட்டப்பட்டிருந்த ஒரு கடையை உடைத்து சிகரெட் பாக்கெட்டுக்களை ஒருவன் திருடியுள்ளான்.. இதையடுத்து அவனை காவலர்கள் கைது செய்து, விசாரணை மேற்கொண்டதில் மேலும் பல குற்ற வழக்குகளில் அந்த திருடனுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் அந்த நபருக்கு தலோஜா சிறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அந்த திருடனுக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த காவலர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஏன் இந்த அதிர்ச்சி என்னவென்றால் கடந்த 3 நாள்களாக அந்த நபருடன் பல இடங்களில் காவலர்கள்தான் பயணம் மேற்கொண்டனர்.
இதையடுத்து சுகாதாரத் துறை அலுவலர்களின் ஆலோசனைப்படி நீதிபதி, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 22 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு காவலர்கள் 2 பேர் கொரோனா தொற்றால் இறந்த நிலையில், இந்தச் சம்பவம் காவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.