கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓராண்டு ஊதியத்தில் இருந்து 30% பிடித்தம் செய்யப்படும் என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இருந்து ஓராண்டுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 16வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதனடிப்படையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 14 தேதி பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் ஊதியத்தில் இருந்து 30% பிடித்தம் செய்ய கர்நாடக மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து இந்த மாதம் (ஏப்ரல்) தொடங்கி ஒரு வருடத்திற்கு அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 30% சம்பளக் குறைப்புக்கான திட்டத்திற்கு மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் கொரோனா தாக்கத்தில் இருந்து பொருளாதார அளவில் மீள மறுமலர்ச்சி திட்டத்தை அறிவித்துள்ளது. மதிப்பீடு செய்வதற்கும் வகுப்பதற்கும் 2 குழுக்களின் அரசியலமைப்பை அங்கீகரித்துள்ளது. ஒரு குழுவில் மகாராஷ்டிரா நிதி அமைச்சகத்தின் முன்னாள் அதிகாரத்துவ அதிகாரிகள் உட்பட வல்லுநர்கள் இருப்பார்கள்.
மற்றொரு குழுவில் அஜித் பவார் (துணை முதல்வர்), ஜெயந்த் பாட்டீல், பாலாசாகேப் தோரத், சாகன் பூஜ்பால் மற்றும் அனில் பராப் ஆகிய அமைச்சர்கள் உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 162 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1297 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.