இத்தாலியில் கொரோனா வைரசின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, அமெரிக்கா உட்பட 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதுவரையில் ஒட்டு மொத்தமாக கொரோனவால் 3,380 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்த கொரோனாவின் கோர தாக்குதலுக்கு அந்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 49 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா வைரசுக்கு இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,916 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக இத்தாலியில் இருக்கும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 15 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.