பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் இந்திய நாட்டை பெருமையாக பேசியிருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவரான மரியம் நவாஸ் ஷெரீப் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தானில் நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கு முன் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தான் இந்திய நாட்டிற்கு எதிர்ப்பாளர் இல்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, எந்த வல்லரசு நாடுகளும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது.
யாரும் இந்தியாவிற்கு ஆணை பிறப்பிக்க முடியாது. மக்களின் நலன்களுக்காக ரஷ்யா-உக்ரைன் போரில், இந்தியா யாருக்கும் ஆதரவு தெரிவிக்காத நிலையில், வல்லரசு நாடுகள் எதுவும் இந்தியாவிற்கு எதிராக இல்லை. நாமும் இந்தியாவும் சேர்ந்து தான் நம் சுதந்திரத்தை அடைந்திருக்கிறோம்.
ஆனால், பாகிஸ்தானை மேற்கத்திய நாடுகள் டிஷ்யூ பேப்பராக பயன்படுத்துகிறது. இந்திய நாட்டிடமிருந்து சுயமரியாதையை பாகிஸ்தான் கற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை கண்டித்த எதிர்க்கட்சி தலைவரான மரியம் நவாஸ் ஷெரீப், அவருக்கு அதிகமாக பிடித்திருந்தால் பக்கத்து நாட்டிற்கு சென்று விடவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் இம்ரான்கானிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அதிகாரம் போனதால் அவர் பைத்தியமாகி விட்டார். உங்களுக்கு இந்தியாவை அதிகம் பிடித்திருந்தால் அங்கே சென்று விடுங்கள். பாகிஸ்தானிலிருந்து வெளியேறி விடுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.