பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி அவரை எரித்து கொன்றதோடு, கள்ளக்காதலும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் சார்பில் துப்புரவு பணியாளராக கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் வடபழனி பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்துவந்த முத்து என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கும் நடைமேடையில் சாந்தி படுத்து தூங்கிக்கொண்டிருக்கும் போது, அதிகாலை 2 மணி அளவில் அங்கு சென்ற முத்து தன் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை திறந்து அதில் இருந்த பெட்ரோலை தூங்கிக்கொண்டிருந்த சாந்தி மீது ஊற்றியுள்ளார்.
இதனால் பதறி சாந்தி எழுந்து பார்த்தபோது, முத்துவின் கையில் தீப்பெட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சாந்தி முத்துவை தடுக்க முயற்சி செய்வதற்குள் முத்து தன் கையில் இருந்த தீக்குச்சியை உரசி சாந்தி மீது போட்டு விட்டார். இதனால் சாந்தியின் உடலில் தீப்பற்றி எரிந்த தோடு, முத்துவின் உடலிலும் தீ பற்றிக்கொண்டது. இவர்கள் இருவரின் அலறல் சத்தம் கேட்டதும் அருகில் தூங்கிக் கொண்டிருந்த சக பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சாந்தியும், முத்துவும் இறந்துவிட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோயம்பேடு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வேறு ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தினால் தனது கள்ளக் காதலனான முத்துவிடம் பழகுவதை சாந்தி தவிர்த்துள்ளதாகவும், அதன் காரணத்தினாலேயே கோபமடைந்த முத்து அவரை உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்றது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.