கண்காணிப்பு வாகனத்தை பயன்படுத்தி குழந்தையின் உயிரை காப்பாற்றியதற்கு போலீஸ் சூப்பிரண்ட் காவலர்களை அழைத்து பாராட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சின்னாநல்லூர் கிராமத்தில் முத்துக்குமாரசாமி – மெல்மா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுகன்யா என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் சுகன்யாவிற்கு திடீரென உடல்நிலை குறைவால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து மோட்டார் சைக்கிள் பழுதடைந்து நின்ற சமயத்தில் சுகன்யாவிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுவிட்டது. மேலும் ஊரடங்கு காலகட்டத்தில் பேருந்துகள், ஆட்டோக்கள் எதுவும் ஓடாத நிலையில் தம்பதிகள் குழந்தையை கையில் வைத்து கொண்டு கதறி அழுதுள்ளனர்.
அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அந்தக் குழந்தையை மீட்டு போலீஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றியுள்ளனர். இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீனிவாசன், குழந்தையைக் காப்பாற்றியதற்காக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவலர்களையும் அழைத்து சான்றிதழ் மற்றும் 500 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கி பாராட்டியுள்ளார்.