கொரோனா பரவல் காரணமாக அத்தியாவசிய தேவை இன்றி தவித்த மக்களுக்கு உதவி செய்த இளைஞர்களை அனைவரும் பாராட்டி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து பகல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வசிக்கும் கிராம மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள காமராஜ் தினசரி மார்க்கெட்டில் 150 கடைகளுக்கு மேலாக இயங்கி வருகின்றது. இதனையடுத்து பகல் 10 மணிக்கு மேல் காய்கறி,மளிகை போன்ற கடைகள் மூடப்படுவதால் விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் வருத்தத்தில் உள்ளனர் . மேலும் கடந்த 15 ஆம் தேதி முதல் இந்த மார்க்கட்டை மூடியதால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கீழப்பாவூர் பகுதிகளில் சுமார் மூவாயிரம் குடும்பங்களுக்கு மேலான பொதுமக்கள் வசித்து வருக்கின்றனர். அங்கு அத்தியாவசியத் தேவையான காய்கறிகள், மளிகை போன்ற பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை உருவாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் இணைந்து காமராஜர் தினசரி மார்க்கெட்டில் தேங்கிக்கிடக்கும் தக்காளி, உருளைக்கிழங்கு, பூசணி, சோம்பு, பீட்ரூட், பீன்ஸ், மாங்காய், சுரக்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகளை ஆட்டோவில் ஏற்றி சென்று அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். இவ்வாறு திண்டாடும் நிலையில் உதவி செய்த இளைஞர்களை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாராட்டி உள்ளனர்.