இலவச கொரோனா தொற்று பரிசோதனையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெர்மனியில் கொரோனா தொற்று பாதிப்பானது நேற்று வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மீண்டும் இலவச கொரோனா தொற்று பரிசோதனையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் ஜெர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலை அடுத்து பதவிக்கு வரவிருக்கும் கட்சிகள் கொரோனா தொற்று தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர்.
அவற்றில் இலவச கொரோனா தொற்று பரிசோதனையை மீண்டும் கொண்டு வருவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜெர்மனியில் உள்ள உணவகங்கள், மதுபான விடுதிகள் போன்றவற்றில் 3G விதிமுறைகளின் படி மக்கள் அனுமதிக்கப்பட்டனர். முக்கியமாக 3G என்பது geimpft, genesen, or getestet ஆகும். அதாவது தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்கள், கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை மேற்கொண்டவர்கள் போன்றோர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் இலவச பரிசோதனை செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை மக்கள் தவிர்த்தனர். ஆனால் தற்பொழுது அரசியல் தலைவர்கள் ‘இலவச பரிசோதனையை முடிவுக்கு கொண்டு வந்தது பணத்திற்காக அல்ல. மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்’ என்று தெரிவித்துள்ளனர். இதற்கு பின்னர் 2G விதிமுறைகள் அமல்ப்படுத்தப்பட்டு தடுப்பூசி பெற்றவர்கள், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் மட்டும் பொது இடங்களில் அனுமதிக்கப்பட்டனர்.