மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமையன்று 99 வயது நிரம்பிய பிரிட்டன் இளவரசர் பிலிப் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பதற்கான காரணத்தை அரண்மனை அதிகாரிகள் வெளியிடவில்லை. ஆனால் தற்போது அவரது உடல்நிலை குறித்து அரண்மனை அதிகாரிகள் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
அதில், “கிங் எட்வர்ட் VII என்ற மருத்துவமனையில் இளவரசர் பிலிப் தொற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் நிலையில் இருக்கிறார். இருப்பினும் அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். ஆனால் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை.” என்று கூறப்பட்டது. இந்நிலையில் கடினமான சூழ்நிலையில் மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு என்று மருத்துவர்கள் கூறினர்.
அதனால் கடந்த வாரத்தின் இறுதியில் இளவரசர் சார்லஸ் தனது தந்தை பிலிப்பின் உடல்நலம் குறித்து மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் வசித்துவரும் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்க்கெல் ஆகிய இருவரும் இளவரசர் பிலிப்பை சந்திப்பதற்காக சுய தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்காக தனியார் விமானத்தை ஏற்பாடு செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.