Categories
மாநில செய்திகள்

“இந்தி தெரியலனா வெளியில போங்க”… ஆயிஷ் அமைச்சகத்திற்கு… எம்பி கண்டனம்…!!

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் கூறிய கருத்தை எதிர்த்து கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நேச்சுரோபதி மருத்துவர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. அதில் நாடு முழுவதிலும் இருந்து 350-க்கும் மேலான மருத்துவர்கள் பங்கேற்றனர். அந்த யோகா பயிற்சியில் 37 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிகழ்ச்சியின்போது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கொட்டேச்சா இந்தியில் பேசியுள்ளார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் பேசும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆனால் செயலர், “எனக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் தெரியாது. இந்தி தெரியாதவர்கள் பயிற்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம்” எனக் கூறியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை குறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டரில், “மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசினுடைய இந்தி திணிப்பு கொள்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

மேலும் இந்த செயல்பாடு கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, உடனடியாக அந்தச் செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக்கொள்ளப்போகிறோம்?” இவ்வாறு அவர் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |