நோய்த்தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதை தடுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர் உடலை அடக்கம்/தகனம் செய்வதை தடுத்தால் குறைந்தபட்சமாக ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொற்று நோயால் உயிரிழந்தவர்கள் உடல் கண்ணியமான முறையில் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும். அதனை தடுக்க முயற்சிப்பது கடும் குற்றம் என தமிழக அரசு கூறியுள்ளது. அவ்வாறு தடுக்க முயற்சிப்பவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சட்டத்தின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்தை இயற்றியுள்ளது.
சென்னையில் ஆந்திராவை சேர்ந்த மருத்துவர் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, கடந்த வாரம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது மருத்துவர் சைமன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து அந்த மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் மீது கற்களை வீசி கொடூர தாக்குதல் நடத்தினர். உடனே அவரது உடல் வேலங்காடு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் இறந்தவர்கள் உடலில் இருந்து கொரோனா வைரஸ் பரவாது என்று விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இறந்தவர் உடலை அடக்கம் செய்வதை தடுத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.