புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தகவல் அளித்துள்ளார்.
புதுச்சேரியில், மாஹேவில் இன்று 51 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த நபர் மாஹே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், அதில் தற்போது 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை படிப்படியாக குறைப்பது குறித்து அரசு நவடிக்கை எடுக்கவும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான், புதுச்சேரியில் மே 3ம் தேதி பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் பரிந்துரை வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு குறித்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார் என சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஊரடங்கு ஆரம்பித்து 38வது நாளாக அமலில் உள்ள நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெகுவாக பாதித்து வருகிறது. இதனை சரிசெய்ய மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.