கனிமொழியிடம் இந்தி தெரியவில்லையா? நீங்கள் இந்தியரா? என பாதுகாப்புப்படை அதிகாரி கேட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி கனிமொழி விமான நிலையத்திற்கு சென்றிருந்த சமயத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி, ‘உங்களுக்கு இந்தி தெரியவில்லையா? நீங்கள் இந்தியரா?’ என்று கேட்டிருக்கிறார்.அந்த சம்பவத்தை கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.ஐ.எஸ்.எஃப் உறுதி அளித்திருந்தது. மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு பெரும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுபற்றி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தி தெரியாது என்று சொன்னதால், ‘நீங்கள் இந்தியரா?’ என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்து கேட்டிருக்கிறார். இந்தியன் என்பதற்கு இந்தி தான் அளவுகோலா? இது இந்தியாவா? இல்லை “இந்தி”-யாவா? பன்முகத் தன்மைக்கு புதைகுழி தோண்டி கொண்டிருப்பவர்களே அதில் புதையுண்டு போவார்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.