இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தியது போன்று பிசிசிஐ-யும் ஊழல் இல்லாமல் வழிநடத்துவேன் என்று புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனிடையே சவுரவ் கங்குலி பிசிசிஐயின் 39ஆவது தலைவராக இன்று பதவியேற்றார். இதன்மூலம் 65 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ஒருவர் பிசிசிஐயின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது. முன்னதாக 1954ஆம் ஆண்டு விஜயநகரத்தைச் சேர்ந்த மஹாராஜ்குமார் பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றார். அவர் 1936ஆம் ஆண்டு இந்திய அணிக்கு தலைமை தாங்கியவர்.
கங்குலியுடன் இணைந்து பிசிசிஐயின் செயலாளராக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெ ஷாவும், இணை செயலாளராக கேரளாவைச் சேர்ந்த ஜெயேஷ் ஜார்ஜ்ஜூம், துணைத் தலைவராக உத்தரகாண்ட்டின் மஹிம் வர்மாவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் இளைய சகோதரர் அருண் துமால் பொருளாளராக பதவியேற்றார்.
மும்பையிலுள்ள பிசிசிஐயின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சவுரவ் கங்குலி, பிசிசிஐயின் தலைவர் பதவிக்கு நிர்வாகிகள் என்னை தேர்ந்தெடுத்தது பெருமையளிக்கிறது.
நான் முதன்முறையாக இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்றபோது இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை இருந்தது. தற்போது மீண்டும் இதே போன்ற சூழ்நிலையில் நான் இந்த தலைவர் பதவியை ஏற்றிருப்பது அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்த பொறுப்பின் மூலம் என்னால் தேவையான மாற்றத்தை கொண்டுவர முடியும்.
எனக்குத் தெரிந்த வழியில் அவற்றை செய்து பிசிசிஐக்கு சிறந்தவற்றை அளிப்பேன். நம்பகத்தன்மை, ஊழல் இல்லாத நிர்வாகம் என்பதில் எந்தவொரு தளர்வுகளும் காண்பிக்கப்படாது. இது பிசிசிஐயின் கீழ் உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் தற்போது புதியதாக பதவியேற்றுள்ள நிர்வாகிகள் கடந்த மூன்றாண்டுகளில் பிசிசிஐயில் எந்த பொறுப்பும் வகிக்காததால் இங்கு என்ன நடந்தது என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. எனவே அனைத்தையும் பரிசீலனை செய்த பின் பிசிசிஐ மற்றும் இந்திய அணிக்கு எது சிறந்ததோ அதை அளிப்போம் என்று உறுதியளித்தார்.
It's official – @SGanguly99 formally elected as the President of BCCI pic.twitter.com/Ln1VkCTyIW
— BCCI (@BCCI) October 23, 2019